என் பால்ய கால நினைவுகள் என்பது வெறும் கடந்த காலம் அல்ல; அது என் வாழ்வின் அடித்தளம். அந்த ஓட்டு வீடும், அதன் வாசப்படியும், என் தந்தையின் வார்த்தைகளும் இன்றும் என்னை வழிநடத்துகின்றன.

🐄 அதிகாலை விடியலும் எங்கள் வீட்டுப் பசுக்களும்

எங்கள் விடியல் மிக அதிகாலையிலேயே தொடங்கிவிடும். எங்களிடம் இரண்டு பசுமாடுகள் இருந்தன, அவை வெறும் கால்நடைகள் அல்ல; எங்கள் குடும்ப உறுப்பினர்கள்!

  • குட்டையக்கா: உருவத்தில் சற்று குட்டையாக இருந்ததால், அவளுக்கு அன்போடு வச்ச பேரு இது.
  • வலம்பரி ஜெர்சி: இவள் ஒரு காளையைப் போல நல்ல உயரமாகவும் கம்பீரமாகவும் இருப்பாள்.

மதி அண்ணன் சரியா 5:30 மணிக்கே வந்து பால் கறந்து கொடுத்துடுவார். அப்பாவிடம் படித்த மாணவர் என்பதால் அந்த மாடுகளையும் எங்களையும் அவர் மிகுந்த அக்கறையோடு கவனிப்பார். அந்த அதிகாலை நேரத்து மாட்டுக்கொட்டகை வாசனை இப்போ நினைச்சாலும் மனசுல அப்படியே இருக்கு.

☕ வாசப்படி தியானம்

காலை 7 மணி… அம்மா எனக்காகப் போடும் தேநீரின் மணம் வீடு முழுக்க நிறைந்திருக்கும். எனக்கென்று ஒரு பிரத்யேகமான டம்ளர் உண்டு. அந்தச் சூடான தேநீரை எடுத்துக்கொண்டு, வீட்டின் முதல் வாசப்படியில் அமர்ந்து கொள்வேன்.

அங்கிருந்து கிழக்கு நோக்கித் தெரியும் தார்ச் சாலையையே வெறித்துப் பார்த்தபடி, ரசிச்சு அந்த டீயைக் குடிக்க எனக்கு முக்கால் மணி நேரம் ஆகும். அதுதான் என் அன்றைய நாளின் அமைதியான தொடக்கம். அந்த அமைதி தான் அந்த​ நாளை எனர்ஜி உள்ளதாக​ மாற்றும்!

🚲 ஹெர்குலஸ் சைக்கிளும்… தந்தையின் பாடங்களும்! 

அப்போதைய எங்கள் குடும்பத்தின் ஒரே ஒரு ‘விமானமே’ அப்பாவின் ஹெர்குலஸ் (Hercules) சைக்கிள் தான். அப்பா பள்ளிக்குக் கிளம்பும்போது என்னையும் அந்த சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுவார்.

அந்தப் பயணத்தின்போது நான் அப்பாவிடம் நிறையப் பேசுவேன். அப்போது அவர் எனக்குச் சொன்ன தாரக மந்திரம் இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது:

“கல்வி ஒன்றுதான் நமக்கு இருக்கும் ஒரே சொத்து. வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, விடாமுயற்சி (Attempts) மட்டும் ஒருபோதும் குறையக்கூடாது.”

தோல்வி கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்கிற அந்தப் பாடம், அந்த சைக்கிள் பயணத்தில்தான் எனக்கு அறிமுகமானது.

🚌 6 நம்பர் பஸ் பயணங்கள்!

பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும், 5 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்ல 6 அல்லது 6A எண்கள் கொண்ட டவுன் பஸ்கள் வரும். பயங்கர கூட்டமாக இருக்கும் அந்தப் பேருந்தில், என் ‘ஸ்டூடண்ட் பஸ் பாஸ்’ உதவியுடன் இலவசமாகப் பயணிப்பேன். அந்த நெரிசலில் தொங்கிக்கொண்டு போகும்போது கூட, அப்பாவின் அந்த “விடாமுயற்சி” பற்றிய வார்த்தைகள் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

முடிவாக… குட்டையக்காவும், வலம்பரியும் மறைந்திருக்கலாம்; அந்த ஹெர்குலஸ் சைக்கிள் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாசப்படியில் குடித்த அந்த டீயின் சுவையும், அப்பா விதைத்த அந்த நம்பிக்கையும் இன்றும் என் வாழ்வின் பெரும் பலம்!